Friday, August 10, 2012

தன்னம்பிக்கை தமிழர்கள் - "என்.சி.மோகன்தாஸ்"






சமுதாய நோக்கோடு-நேர்மையாகவும்-அதே சமயத்தில் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு ஆட்சியாளர் மூலம் தீர்வு காணும் வகையில் வெற்றிகரமாகவும் பத்திரிகை நடத்தி வருவதற்கிடையில்-

   வெறும் பொழுதுபோக்கு அல்லது  ஃபேஷன் என்கிற அளவில் இல்லாமல் தமிழ்மேல் பற்றுக் கொண்டு ஆத்மார்த்தமாய் சங்க நாணயங்களின் ஆராய்ச்சியை செய்து விருதுகள் பல பெற்று தமிழக சரித்திரத்திலும் இடம் பிடித்திருக்கிறார் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

   தமிழ் செம்மொழியாவதற்கு இலக்கியப் பூர்வமான ஆதாரங்கள் மட்டும் போதாது என்று கருதப்பட்டது. அதன் காரணமாக இவர் ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்துள்ள இந்த நாணய விஷயங்கள், தொல்பொருள் சான்றாகவும் அமைந்திருப்பது உண்மை. நமக்கும் பெருமை.

   எளிமை- வயதை மீறிய இளம்தோற்றம்- தமிழ்ப்பற்று- விஷய ஞானம்- சமூக அக்கறை- தளரா உழைப்பு-வேகம்- விவேகம் என இவரிடம் ஏராளமான சிறப்புகள்.

   அந்த நாட்களில் வடிவீஸ்வரம் கிராமத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் இவரது படிப்பு ஆரம்பமாயிற்று.ஆசிரியர் மணலில் எழுதித்தான் சொல்லித் தருவார்!

   ஒருவருடம் கான்வென்ட்! பிறகு எஸ்.எல்.பி. இங்கிலீஷ் பள்ளி! எஸ்.எஸ்.எல்.சி. வரை படிப்பில் ஆர்வமில்லாமல் சுமாரான மாணவராக இருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இண்டர்மீடியெட்  சேர்ந்ததும் வியக்கத்தக்க மாற்றம்!

   இயல்பிலேயே கணக்கின்மேல் பிணக்கு என்பதால் இரண்டாம் குரூப் எடுத்து மெடிக்கல் சேரும் லட்சியத்தில் இவரது படிப்பு ஆர்வம் அதிகமாயிற்று.

    அதன் பலன் - முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருவரில் ஒருவர் எனும் பெருமை இவருக்கு! இருந்தும் கூட மெடிக்கல் சீட்  கிடைக்காமல் அழகப்பா கல்லூரியில் பி.எஸ்.ஸி (ஜியாலஜி) சேர்ந்து தமிழ் மாநிலத்திலேயே முதல் மாணவராக வெளியே வந்தார். 

    இதற்கிடையில் இளம் வயதிலேயே  1953ல் இவருக்கு திருமணம்! திருமணத்தை தன் படிப்புக்கு  தடைக்கல்லாக ஆக்கிவிடாமல் கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ.(ஜியாலஜி) பிரசிடென்ஸி கல்லூரியில் முடித்தார். அப்போது மெரிட் அடிப்படையில் அவருக்கு அரசாங்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

   ஆனால் அதை மேல்படிப்புக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை. வேகமாய் வளர்ந்து வந்த தினமலர் பத்திரிகையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு!

   ``ஜியலாஜி பட்டதாரியாக அரசாங்க வேலை பார்த்து சாதிப்பதை விட பத்திரிகை துறையில் நிறைய சாதிக்கலாம். நம் மக்களுக்கும் தொண்டு செய்யலாம்’’ என்று தந்தை திரு. இராமசுப்பைய்யர் சொன்ன வாக்குகளில் இருந்த உண்மை இவரை பத்திரிகை துறை பக்கம் திருப்பிற்று.

   உப்பு உற்பத்தி தொழில் செய்து வந்த மறைந்த திரு.ராமசுப்பைய்யர் 1951ல் தினமலர் நாளிதழை ஆரம்பித்தார். முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அச்சான பத்திரிகை தமிழ்நாடு தனி மாநிலமான பிறகு 1957 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.

   தச்சாநல்லூரில் இயங்கிய அந்த நாட்களில் இன்றுபோல வசதிகள் இல்லை. கையால் அச்சு கோர்ப்பு - சிலிண்டர் மெஷின்! மின்சார தட்டுப்பாடு! ஜெனரேட்டர்களும் கிடையாது!

   திருநெல்வேலியில் வேறு தமிழ் நாளிதழ்கள் இல்லாததாலும் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாலும் 3 ஆயிரம் பிரதிகளில் ஆரம்பித்த பத்திரிகை வேகமாய் உயர ஆரம்பித்தது.

   டெலிபோன், ரேடியோ மூலம் செய்திகள் சேகரித்த அந்தக் காலத்தில் நெல்லையில் முதன் முதலில் டெலிபிரிண்டரை பயன்படுத்தியது இவர்கள் தான்.

    1962 ல் மேல்நாட்டு மிஷின்கள் வரவழைத்து அலுவலகம் சென்னையில் உள்ள வண்ணாரபேட்டைக்கு மாறி- மதுரை வரை விற்பனையாயிற்று.

     இன்று என்றில்லை - கட்சிக்காரர்களின் மிரட்டல் அந்த நாட்களிலும் இருக்கவே செய்தது. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களை வெளிப்படுத்தும் போது ரெளடிகளை அனுப்பி `பதம்’ பார்க்கிற கலாச்சாரத்தையும் எதிர்கொண்டு- தினமலர் வளர்ந்திருக்கிறது. எதிர்நீச்சல் தினமலருக்கு புதிய விஷயமல்ல!

திருச்சி பதிப்பு 1966ல்!

     தினமலர் தி.மு.கவுக்கு எதிரானது என கலைஞரிடம் ஒரு தவறான தகவல் தந்து - 1969 அவரது ஆட்சியில் அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.

     ஏகப்பட்ட நிதி நெருக்கடிக்கிடையில் சின்னச் சின்ன கோர்ட் விளம்பரங்களை போட்டு சமாளித்ததை கிருஷ்ணமூர்த்தி இன்றும் நினைவு கூர்கிறார்.

     1972ல் எம்.ஜி.ஆர் தனியாய் கட்சி ஆரம்பித்த போது தினமலருக்கும் ஒரு  திருப்புமுனை! பரபரப்பாய் விற்பனை! அது வளர்ந்து வளர்ந்து சென்னை, மதுரை, ஈரோடு... என பரவி இன்று 10 பதிப்புகள்!

   படித்தது ஜியாலஜி என்றாலும் கூட கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ்மேல் ஆர்வம் அதிகம். தமிழ் எழுத்துகளை கம்போஸ் செய்வதில் ஏன் இத்தனை சிரமம் என இவர் ஆராய்ச்சியில் இறங்கினார். அதற்கு தமிழாசிரியர் ராமமூர்த்தி இவருக்கு உதவி செய்தார்.

    கல்வெட்டு, வட்டெழுத்து பற்றி இவர் படித்து, நேரில் போய் பார்த்து ஆராய்ச்சி செய்து வட்டெழுத்து பற்றி மூன்று புத்தகங்களுக்கு எழுதியிருக்கிறார்.

    இந்த ஆர்வமே இவர் பின்னாளில் நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க காரணமாய் அமைந்தது.

     கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் எழுத்து சீர்திருத்த இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டு 1978ல் ஏகப்பட்ட எதிரிப்புக்கிடையே பெரியாரின் எழுத்தை தினமலரில் புகுத்தினார்.

     1987ல் கம்ப்யூட்டர் வந்த பின்பு- தமிழ் எழுத்து கம்போஸிங்கிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமை.

      கிருஷ்ணமூர்த்தி பூனா கம்பெனியுடன் சேர்ந்து சாஃப்ட்வேர் உருவாக்கி, அவர்களுக்கு இலவசமாய் ஐந்து  ஃபான்ட்கள் தயார் செய்து கொடுத்தார். பூனா கம்பெனி அவற்றை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்திருக்கிறது.

      ஆர்.கே.தயாரித்துத் தந்த பிரபலமான ஸ்ரீலிபி எழுத்தும், இவரது தயாரிப்பான கீபோர்டும்தான் இன்னமும் தினமலர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

       ``அப்பா ராமசுப்பைய்யர் போட்ட அஸ்திவாரம் எங்களுக்கு பலமாய் இருக்கிறது. அப்பா, தமிழ் அபிமானி, மனிதாபிமானியும் கூட அடித்தள மக்களின் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

        இப்போது என்றில்லை, அந்த நாட்களிலும், தினமலர் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் பிரச்னைகளைப் படித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது- சந்தோஷமான வெற்றி.

நன்றி   தினமலர் - இரா.கிருஷ்ணமூர்த்தி                
                     
                                                                     தொடரும்....................