Friday, June 29, 2012

நேதாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

  • இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...
  • ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!
  • கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!
  • லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!
  • ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!
  • சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!
  • `குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!
  • நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!
  • போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!
  • ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!
  • 1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி! 
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்! 
  • ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!
  • திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!
  • ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!
  • இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்! 
  • காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!
  • சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
  • தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!
  • பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!
  • ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி! 
  • பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!
  • 1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!
  • டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!
  • 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!
  • ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.

Monday, June 25, 2012

வானத்தை தொட்டவன்


     ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடத்திலிருந்து மணி சப்தம் கேட்கவே. வெறும் கட்டிலில் படுத்திருந்த தாத்தா மெல்லத் தலையைத் தூக்கி... ‘ஏய்... பாலு! “ ஏய்... பாலு! மொத மணி அடிச்சிட்டான் போலிருக்கே... போகலியா நீ..?“ என்று எழ முயன்றார். 
     அது நைந்த கட்டில். கயிறுகள் ஆங்கங்கே முடிச்சுப் போடப்பட்டு ஊஞ்சல் போல் தொங்கிற்று. மூங்கிலின் விரிசலில் மூட்டைகளின் குடியிருப்பு!
      அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து. என்னவோ அதையே அசுர சாதனை செய்து விட்டது போல களைப்பில் மூச்சு வாங்கி. “பாலு! அங்கே என்ன பண்ணிட்டிருக்கே?“ என்றார் தொழுவம் பக்கம் திரும்பி.
       “பசுவுக்கு தவிடு! “ நான்காம் கிளாஸ் பாலு சொல்லிவிட்டுத் தொட்டியில் தவிடு கொட்டி முழங்கைவரை உள்ளே செலுத்திக் கலக்கினான்.
  “ம். தின்னு!  
     பாலு கை கழுவிக் கொண்டு திரும்பிப் பார்க்க, பசு தவிடு தின்னாமலே நின்றிருந்தது. 
     “ஏய்... தின்னு! “ என்று அதன் வாயைத் தொட்டியில் அழுத்தினான். அது திமிறிற்று. தலையை உதறிற்று. 
     “அம்மா“ என்று குரல் கம்ம, அலறிற்று. அப்படி அலறும்போது அதன்அடி வயிறு எக்கிற்று. வாலைத் தூக்கி, சடசடசென மூத்திரம் போயிற்று. அந்த அலறல் சாதாரணமானதில்லை. அதில் ஏதோ ஒரு வித்தியாசமிருந்தது. 
     தெருவில் மாடுகள் மேய்ச்சலுக்கு மணியாட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்க. பசு மறுபடியும் “அம்மா... !  
     “ஏய்... உனக்கு என்னாயிற்று? ஏன் இப்படி கத்துகிறாய்?“ என்று அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்டான். அதன் உடலெல்லாம் சுடுகிற மாதிரி இருந்தது. கண்களில் ஒரு விதப் பரிதவிப்பு. 
     உடம்பு சரியில்லையோ
     “பாலு! ரெண்டாம் மணி அடிக்கப் போறான். நீ இன்னும் போகலியா...?“
      “தாத்தா! அம்மாவுக்குக் காய்ச்சல் போலிருக்கு. டாக்டர்ட்ட சொல்லி மருந்து வாங்கி வரட்டா..“ 
     “அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ கிளம்பு! 
      “தவிடு திங்கல. வைக்கோல் தொடலை. மேய்ச்சலுக்கு இன்னைக்கு அனுப்ப வேணாம்!  
     அப்போது பசு. “அம்மா“ என விகற்பமாய்க் கத்த. “பார்த்தியா தாத்தா.. இப்படித்தான் நாலைஞ்சு நாளாய் கத்திகிட்டிருக்கு! என்னென்னே தெரியலை.“
      “அமாவாசை வருதில்லே.. அப்படித்தான் கத்தும! நீ கிளம்பு! 
      “அமாவாசைக்கும் பசு கத்தறதுக்கும் என்ன தாத்தா சம்மந்தம்...? எனக்கு புரியலே.“ 
     “உனக்குப் புரியாது. நீ புறப்படு! 
           “அம்மாவைத் தனியா விட்டுட்டுப் போக எனக்கு மனசே இல்லை தாத்தா! இது கத்தறதைப் பார்த்தா எனக்கு அழுகை அழுகையாய் வருது! 
      “எல்லாம் நான் பார்த்துக்கறேன். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பாரு... இவ கத்தாமல் சந்தோஷமாயிருப்பாள். சாந்தமாயிருவா“
      பாலுவிற்கு வகுப்பில் கவனம் செல்லவில்லை. பசுவின் அந்த ஓலமே காதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது.
      டீச்சர். தாயின் பெருமை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
      “இந்த உலகத்தில் தாய்க்கு இணையாக ஒப்பிட வேறு எதுவுமே இல்லை ஒரு தாய் என்பவள் மெழுகுவர்த்தி போன்றவல். தன்னை உருக்கி குடும்பத்திற்கு வெளிச்சமேற்றிக் கொண்டிருப்பவள். கணவன். குழந்தை என்று வேணிப் பாதுகாப்பவள். ‘ஏய் பாலு! அங்கே தலைகுனிஞ்சுகிட்டு என்ன பண்ணுகிறாயாம். தூங்குகிறாயா...?“
      அவன் நிமிர. “என்னாச்சு உனக்கு... ஏன் அழுகிறாய்?“
      “எனக்கு அம்மா நினைப்பு எடுக்குது டீச்சர்! நான் அனாதை! 
      “சேச்சே! இப்படிவா! “ என்று அவனை அரவணைத்துக் கொண்டு, “இந்த உலகில் யாருமே அனாதை இல்லை. உனக்குத்தான் தாத்தா இருககாரே! 
      “அன்பு செலுத்த ஆளில்லை டீச்சர்.“ 
     “ஏண்டா அப்படி நினைக்கிறாய். உங்க வீட்டில் பசு இருக்கிறது. அதைவிட வேறு யாரால் அன்பு செலுத்திவிட முடியும்? அதுவும் உன் தாய் போலத் தான்!தாயைப் போலவே பசுவும் பிறருக்காக வாழ்கிற ஜீவன்தான்! அதை நீ நேசி. அதை உன் தாயாக நினைத்து சமாதானப்படு. என்ன தெரிஞ்சுதா? அதற்கு எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக்கொள்!  
     டீச்சரின் வார்த்தைகள் அவனது மனதைத் தைத்தன. ‘சே! அம்மா பசுவுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவளை, கவனிக்காமல் நான் இங்க உட்கார்ந்திருக்கிறேனே. நான் மடையன்! புதிதியில்லாதவன்! அம்மா உயிருடன் இருந்திருந்தால் இப்படி அலட்சியமாட்ய இருப்பாளா...? உடன் வீட்டுக்குப் போகணும். பசுவை டாக்டரிடம்...‘ 
 அப்போது இன்ர்வெல் பெல்
   பிள்ளைகள் இரைந்து கொண்டு புளியமரத்தை நனைக்க ஓட, அவன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சீக்கிரம்...சீக்கிரம்
மூச்சிறைக்க நடந்து தொழுவத்துக கதவைத் திறந்தவனுக்கு ஏமாற்றம். அங்கே பசுவைக் காணவில்லை
     ‘எங்கே போயிற்று? மேய்ச்சலுக்கு ஓட்டிப் போயிருப்பார்களோ? இந்தக் கடுமையான வெயிலில் அது எப்படி நடந்து போகும்! அவனுக்குத் தாத்தாவின் மேல் கோபம் கோபமாய் வந்தது. வயசாகிவிட்டதே தவிர பெரிசுக்குப் புத்தியில்லை. எத்தனை தரம் எடுத்துச சொன்னேன். நான் பார்த்துக கொள்கிறேன் என்று இப்போது.....‘ 
     “தாத்தா.... ! என்று அலறினான். 
     தோட்டத்தில் கவமுள்ளை அடுப்பிற்கு வேண்டி சின்னச் சின்னதாய் வெட்டிக் கொண்டிருந்தவர். “என்னடா.. பள்ளிக்கூடம் அதுக்குள்ளே விட்டிருச்சா...?“ என்றார்.
 
     “இல்லை. இன்டர்வெல். பசு எங்கே?“ 
     “வெளியே ஓட்டிப் போயிருக்காங்க.“
      “எதுக்கு?“ 
     “அதெல்லாம் உனக்கு ஏன்? நீ பாட்டிற்கு உன் ஜோலியைப் போய் பார்! 
      “....இல்லை எதுக்குன்னு தெரிஞ்சாகணும். சொல்லு தாத்தா. எதுக்காக ஒட்டிப் போனாங்க?“ 
     “காளைக்கு“ 
     “அப்படின்னா?“ 
     “பசு சினைபடத் தான்“ 
     “எதுக்கு சினைபடனும்?“ 
     “இவன் பெரிய கலெக்டர்! கேள்வி மேல் கேள்வியாய் கேட்கிறான்!மணியடிச்சுட்டான். போடா  ஸ்கூலை பார்த்து. பல்லு பேந்துரும்!  
     “எங்கே ஒட்டிப் போனாங்கன்னாவது சொல்லு தாத்தா!  
     “புளியந்தோப்பு. போதுமா ஆளை விடு!  
பாலு உடனே புளியந்தோப்பை நோக்கி ஓட ஆரம்பித்தான். 
புளியங்தோப்பிள் ஆட்கள் வேப்பங்குச்சியால் பல் தேய்த்துக் கொண்டு பரவலாய் நின்றிருந்தனர். வெற்று மாப்பு: எண்ணெய் வழியும் முகம், ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஒரு பசுவைப் பிடித்திருந்தனர். பெரிய புளிய மரத்தின் வேரில் காளை ஒன்று மொழுக் மொழுக் சதையுடன் கட்டப்பட்டிருந்தது. அதன் உடல் முழுக்க சதைதொங்கிற்று. 
அதற்கு வாட்டமான கொம்புகள்! காரியக்காரன் மூக்கணாங்க கயிற்றுடன் தாம்புக் கயிறு மாதிரி மொத்தமான கதம்ப கயிற்றைச் சேர்த்துக கட்டி தன் கையில் பிடித்திருந்தான். 
     “காரியக்காரரே... பார்த்தால் சின்னக் காளையாய்த் தெரியறதே! பசு பலப்படுமா..?“ 
     “பலப்படுமாவா? இளங்காளை! முரட்டுக்காளை! “ என்று தட்டிக் கொடுத்தான். 
     “நிச்சயம் தப்பாது! பசுவுக்குக் கப்புன்னு பிடிச்சுக்கும்! “ என்று அவன் தன் மீசையைத் தடவிவிட்டுக் கொண்டான். அவன் அந்த காளையைவிட துடிப்பாயிருந்தான்.

                                            (இன்னும் வானத்தை தொடுவான்.................)

Wednesday, June 6, 2012

முன்னேறு!முன்னேற்று! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்)


ஒர் ஊர் அல்லது பகுதியின் வளர்ச்சி அங்கு அமைந்துள்ள மழைவளம், கனிம மண், தொழில் நீர், மனிதவளம் போன்றவற்றை உட்கொண்டு அமையும்.
  இத்தனை வளங்கள் இருந்தாலும் அவற்றை வளர்க்கவும் விஸ்தரிக்கவும் போக்குவரத்தில் தரை, ரயில், ஆகாயம், கடல் மார்க்கங்கள் அவசியம்.
   இவை எதுவுமேயில்லாமல் சென்னை –திருச்சி-தேசிய நெடுஞ்சாலைக்குக் கொஞ்சம் பக்கம் என்கிற ஒரு தகுதி மட்டுமே உள்ள மிக வறட்சியுடன் –எந்த வளமுமேயில்லாமலிருந்தது பெரம்பலூர்.
   பெண் கொடுக்கவும், எடுக்கவும் யோசிக்கப்பட்டு, இந்தப் பகுதியில் தொழில் துவங்கினால் வளருமா-விளங்குமா என ஒதுக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர்.
   இன்று பெரம்பலூர் வெளியே தெரிகிற அளவிற்கு வளர்ந்திருப்பதில் தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனங்களும் முக்கிய காரணமாய் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
   நூறு வருடப் பாரம்பர்யம் உள்ள கல்வி நிறுவனங்கள் பலவும், உள்ளதைக் கட்டிக்காத்தால் போதும் –விரிவுபடுத்த வேண்டாம்’ எனச் செயல்படுவதைப் பார்க்கிறோம்,
   இவர்களோ பதினைந்து வருடங்களில் 17 நிறுவனங்களாக வளர்ந்திருக்கின்றனர். வளர்ந்து கொண்டிருக்கின்றனர். 17 கல்வி நிறுவனங்களுடன் பால் உற்பத்தி, போக்குவரத்து, நிதி நிறுவனம், சர்க்கரை ஆலை, மருத்துவமனை, நட்சத்திர ஓட்டல், மின்உற்பத்தி என இக் குழுமத்தின் விழுதுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.
   30 ஆயிரம் மாணவ –மாணவிகளுக்கு மேல் உலகத் தரத்தில் கண்ணீயம் –கலாசாரம் –கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அந்தக் கல்வி நிறுவனங்களை நிறுவி தலைமை ஏற்று நடத்தி வரும் திரு.அ.சீனிவாசன்  அவர்கள் பெரிய படிப்பாளியல்ல, வசதியான குடும்பத்தில் –நகரத்தில் –கல்வியாளர்களுக்குப் பிறந்தவருமல்ல.
       மிகச் சாதாரண கிராமத்தில் –வறுமை –கஷ்டத்திற்கிடையே படிப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் ஆரம்பப் பள்ளியோடு நின்றுவிட்டவர்.
  வசதியில் பிறந்து – வசதியை அனுபவித்து, பாரம்பர்ய செல்வத்தைக் கட்டிக்காக்காமல் அழித்து –அழிந்து போகிறவர்களைக் கூட பார்க்கிறோம். மூதாதையர் அமைத்துக் கொடுத்தவற்றை மேலும் பெருக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
  அப்படியிருக்கும் போது எந்தவித அடித்தளமும், சொத்து –சுகம் எதுவுமில்லாமல் சுய உழைப்பில் முன்னுக்கு வந்திருக்கும் சீனிவாசன் நிச்சயமாய் ஒரு முன்னுதாரணம்.
  இவரது தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் பெரம்பலூரிலிருந்து மேற்காகத் துறையூர் சாலையில் ஐந்து நிமிடப் பயணத்தில் அமைந்திருக்கின்றன.
  கட்டாந்தரையாக, பொட்டாந்தரையாக –வானம் பார்த்துக் கிடந்த அந்த வறண்ட பகுதியில் எங்குப் பார்த்தாலும் கட்டடங்கள்! பசுமையாய்ப் புல் தரைகள்! மரங்கள்! கம்பீரமாய் மதில் வளைவு! உள்ளே நுழைந்தால் அழகான கட்டமைப்பில் சிமெண்ட் சாலைகள்! வெளிநாட்டுப் பல்கலைக்கழக அளவிற்கு வனப்பு! வசீகரம்!
  அங்கங்கே சீருடையில் மாணவர்கள்! பசுமை வளர்க்கும் தொழிலாளர்கள்! வகுப்பு முடிந்து ஓய்விற்கு அல்லது சாப்பிட வரிசை கடைப்பிடித்து நடக்கும் பள்ளியினர்!
   எல்லாப் பொறுப்புகளையும் தன் தலையில் சுமக்க வேண்டும் என்பது போல கீழ்த் தளத்திலேயே –முகப்பிலேயே –சீனிவாசன் `ஐயாவின் அலுவலக அறை!
   நண்பர் தினத்தந்தி குருவுடன் உள்ளே நுழைந்தால் ஆச்சர்யம்! உடையும் மனமும் வெளுப்பாய் வரவேற்கிறார். முகத்தில் கறுப்பையும் பிரகாசிக்கும் வைக்கிற களை! பார்த்த மாத்திரத்தில் நமக்கும் உற்சாகமேற்கும் மலர்ச்சி; நீண்ட அரைக்கைச் சட்டை! எளிமை! வெகுளி!போலியில்லா –ஆடம்பரம் –ஆர்ப்பாட்டமில்லா –அமைதியான அணுகுமுறை! யதார்த்த நாட்டுப்புறாப்பேச்சு!
  கல்வியின் அவசியத்தை உணர்ந்த –உணர்த்தி வரும் அவரைப் பார்க்கும் போது`கர்மவீரர்’ ஞாபகத்திற்கு வருகிறார்.
  நாங்கள் அவரைச் சந்திக்கப் போனது மாலை ஆறு மணிக்கு மேல்! அலுவலக நேரம் முடிந்தாலும் –அவருக்கு ஓய்வில்லை. அவரது சிந்தை –செயல் எல்லாம் எல்லாம் கல்வி நிறுவனங்கள் பற்றியே!
  மாலையில் நிறுவனங்களைச் சுற்றிப்பார்த்துத் தேவைகளை நேரில் பார்த்து –விசாரித்தறிவது  அவரது வழக்கம். மாணவர்களோடு அளவளாவி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி பண்ணுவார்.
  `ஐயா’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் அவரின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்து-துணையாக இருந்துவரும் –ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.வெங்கட்ராஜ் அவர்களும் நம்மோடு இணைந்து கொண்டார்.
  மாலைச் சிற்றுண்டியாக –பிரசாதம் போல சுண்டல் வருகிறது. கவனிக்கவும்-சுண்டல்!``எடுத்துக்குங்க!’’ என்று `ஐயாவும் எடுத்துச் சுவைக்கிறார். உதவியாளரை அழைத்து``உப்பு தூக்கலாய்த் தெரிகிறதே! ஹாஸ்டல் மாணவர்களுக்கும் இதுதானே போகும் –கவனமாய் இருங்கப்பா!’’ என்கிறார். ஐயா அவ்வப்போது ஹாஸ்டல் விசிட் செய்து உணவுப் பதார்த்தங்களைப் பரிசோதிப்பதுண்டாம்.   
  ஹாஸ்டலில் மாலைச் சிற்றுண்டி பெரும்பாலும், சுண்டல், பட்டாணி, வேர்க்கடலை,பயிறு... இப்படி எண்ணெயில்லாச் சத்துணவு!
  ``பிஸா, பர்கர் அது இதுன்னு கொழுப்பு, எண்ணெயும் தவிர்த்து நமது இயற்கை உணவை இளம் வயதிலேயே மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு’’ என்று புன்னகைக்கிறார்.
  ``மாணவர்கள் இவற்றை ஏற்றுக் கொள்கிறார்களா வரவேற்கிறார்களா...?
  ``நிச்சயமாய்.நல்ல பழக்க வழக்கங்கள்  -நல்ல குணங்கள், கலாச்சாரம் இவற்றை நல்ல விதமாய் எடுத்துச் சொன்னால் நிச்சயம் யாருமே ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளை நல்லவர்களாக –வல்லவர்களாக உருவாக்கும் பொறுப்புப் பெரியவர்கள் கையில்தான் உள்ளது!’’ என்று புன்னகைக்கிறார்.
  ``நான் எந்தப் பள்ளிக்கூடத்தில் போய் நீதியும் நியாயமும் கத்துக்கிட்டேன்? வழிகாட்ட –மெருகூட்ட பெற்றோர்களும் இல்லை. எல்லாம் அனுபவம்தான். நான் யாருக்கும் துரோகம் பண்ணியதில்லை. நேரே வா! நேரே போதான்!
  யாரையும் எதிரியாய் பாவித்ததில்லை. எனக்கு நண்பர்களும் இல்லை. எந்தக் கெட்ட சகவாசமும் வைத்துக் கொள்வதில்லை. அதனால் நோய் நொடி எதுவும் என்னை நெருங்கினதில்லை. எனக்கு நண்பர்ன்னு சொன்னா அது மனசாட்சி, அப்புறம் கடவுள் மட்டும்தான்.
   நண்பர்கள் இல்லைன்னு சொன்னா –நான் யார்ட்டயும் நட்பு பாராட்டறதில்லைன்னு அர்த்தமில்லை, நண்பர்கள்ன்னு வரும்போது பொழுதுபோக்கு, விரும்பியோ விரும்பாமலோ அனாவசிய அரட்டை, சுவாரஸ்யத்திற்காக சின்னச் சின்ன தவறுகள், முறைகேடுகள்ன்னு துணை போக வேண்டி வரும். அதனால் மொத்தமாகவே அதற்கு நான் நேரம் ஒதுக்கிறதில்லை.
  ஒதுக்க முடியறதில்லை. அதுக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே நான் என் சொந்தக் காலில் நிற்க வேண்டி வந்த சூழ்நிலை, வறுமை, என் தேவைக்கும் குடும்பத்தின் தேவைக்குமாய் உழைப்பதிற்கிடையே நண்பர்கள் –உல்லாசம்னு –யோசிக்கக் கூட அவகாசமில்லை.


முன்னேறு!முன்னேற்று!  இதன் தொடர் வரும்...................

பாரதிதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்


வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன்.
  •   சுப்புரத்தினம்- பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைக் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம்!
  •  கவிகாளமேகம்ராமானுஜர்பாலாமணி அல்லது பக்காத் திருடன்,அபூர்வசிந்தாமணிசுபத்திராசுலோசனாபொன்மூடிவளையாபதி ஆகிய படங்கள் அவரது பங்களிப்புடன் வந்தனபுதுவை கே.எஸ்.ஆர், கண்டெமுது  வோன், கிறுக்கன், கிண்டல்காரன் ஆகியவை இவரது புனைபெயர்கள்!
  •   `வளையாபதி’ படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களை தூக்கி எறிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர்!
  • கோழி, புறா, பசு மூன்று அவர் விரும்பியவை `டேய்’ என்பார் கோழியை.`வாம்மா’ என்பார் சேவலை `வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும் என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்! 
  •   யார் பேசும்போது மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப்படுத்தபடியேதான் எழுதுவார்!
  • `என்னை ஏன் மக்கள் போற்றுகிறார்கள்? என்னுடைய அஞ்சாமைதான் அதற்குக் காரணம். மடமையை ஆதிரிப்பவர்களை, தமிழ்ப் பண்பாட்டினை இகழ்பவர்களை நான் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள்!’ என்று தமிழக மக்களுக்கு உத்தரவு போட்டவர்!
  • உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுகிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன்’ என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்!
  •  `ஏம்ப்பா... தி.நகர் வர்றியா?’ ஆட்டோக்காரரைக் கேட்டார். `தி. நகருக்கு வரல’ என்றார் அவர். `அப்ப ஏம்ப்பா இங்க நிக்கிற?’ என்று சண்டைக்குப் போனார் பாரதிதாசன். உணவு விடுதியில், `சூடா தோசை இருக்கு’ என்றார் கடைக்காரர். ஆனால், ஆறிய தோசை வந்தது. `இதுதான் உன் அகராதியில சூடா?’ என்று கொந்தளித்தார். இப்படி அவர் நித்தம் யுத்தம் செய்த இடங்கள் ஏராளம்!
  • பிறந்தது, வளர்ந்தது. வாழ்ந்தது, உயர்ந்தது அனைத்தும் புதுசேரியில். கடைசி இரண்டு ஆண்டுகள் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார். `சென்னை அவரைக் கொன்றுவிட்டது’ என்பார்கள் நண்பர்கள்!
  • புதுச்சேரியில் ஒரு முறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூறாவளி. ஒரு முழு நாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்தார். அவரது `பறந்து திரிந்தஅனுபவங்களைக் `காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர்!
  • நாடு முழுவதும் நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. `நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது’ என்ற அண்ணா. அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார்!
  •  பாரதிதாசன் என்று இவர் பெயர் மாற்றம் செய்தை தி.க-வினர் கடுமையாக எதிர்த்தார்கள். `சாதிக் கொடுமையை உண்மையாக எதிர்த்தவர் பாரதி. அவரைப்போலவே எளிய நடையில் மக்களுக்கு வேண்டிய கருத்தை இயற்ற வேண்டும் என்பதால். பாரதிதாசன் எனப்பெயர் வைத்துக் கொண்டேன். யார் எதிர்த்தாலும் கவலை இல்லை’ என்றார்!
  • ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது, அவரை போலீஸீக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர்!
  • எப்போதும் பச்சை சால்வைதான் அணிவார். அதற்குள் ஒரு கத்தியும் ஒரு வாளும் வைத்திருப்பார். இரவில் எங்கு சென்றாலும் அதை மறக்காமல் எடுத்துச் செல்வார்!
  •   புதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக் கூடத்தில் சிலம்பம் கற்றார். குத்துச்சண்டையும் குஸ்தியும் தெரியும். அதற்காகவே உடும்புக் கறியை அதிகமாகச் சாப்பிட்டார். `உடல் நலனைப் பேணுதலே அனைத்துக்கும் அடிப்படை’ என்பார்!
  • சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன்’ என்று பாரதியார் கேட்டுக் கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், `எங்கெங்கு காணினும் சக்தியடா!
  •   பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார். அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றிவிடாமல் 15 பள்ளிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள், `அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம். அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?என்று கொதித்தார்!
  •  `’ என்றால் அணில் என்று இருந்ததை `அம்மா’ என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான்!
  • மளிகைக் கடைப் பொட்டலங்களில் இருக்கும் சணல், நூல் ஆகியவற்றைச் சேகரித்துவைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. `நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன். மளிகைக் கடையில் வளர்ந்தவன். நூலின் அருமை எனக்குத்தான் தெரியும் என்பார்!
  • இசை, மெட்டு குறையாமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர். தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார். `வீர சுதந்திரம் வேண்டி நின்றார்பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன் முதலாகப் பார்த்தார்!
  • பழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களுக் மன்னர் மன்னன் என்ற மகனும் உண்டு!
  • பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கவே சென்னை வந்தார். சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா நடிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால், படப்பிடிப்பு துவஙகவே இல்லை. பாரதியார் வாழ்க்கை வரலாற்றைச் சினிமாவாக எடுக்கத் தொடக்க கலத்தில் முயற்சித்து கதை, வசனம் எழுதிவைத்திருந்தார். அதுவும் சாத்தியமாகவில்லை. பாவேந்தரின் திரைப்பட ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை!
  • தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள். பிறகு, உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்!’ என்று கட்டளையிட்டார்!
  • ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரதிய ஞானபீட விருது இவருக்குத் தருவதாக முடிவானது. அதற்குள் அவர் இறந்து போனார். அவ்விருது, வாழும் கலைஞர்களுக்குத் தரப்படுவது என்பதால். இவருக்குக் கிடைக்கவில்லை!
  • வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை.... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும் அதைத்தான் நான் செய்கிறேன்என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம் மயானக் கரையில் வைத்து அவ்வை டி.கே. சண்முகம் பாடினார்... `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இன்பம் சேர்க்க மாட்டாயா!