ஒர் ஊர் அல்லது பகுதியின் வளர்ச்சி அங்கு அமைந்துள்ள மழைவளம், கனிம மண், தொழில் நீர், மனிதவளம் போன்றவற்றை உட்கொண்டு அமையும்.
இத்தனை வளங்கள் இருந்தாலும் அவற்றை வளர்க்கவும் விஸ்தரிக்கவும் போக்குவரத்தில் தரை, ரயில், ஆகாயம், கடல் மார்க்கங்கள் அவசியம்.
இவை எதுவுமேயில்லாமல் சென்னை –திருச்சி-தேசிய நெடுஞ்சாலைக்குக் கொஞ்சம் பக்கம் என்கிற ஒரு தகுதி மட்டுமே உள்ள மிக வறட்சியுடன் –எந்த வளமுமேயில்லாமலிருந்தது பெரம்பலூர்.
பெண் கொடுக்கவும், எடுக்கவும் யோசிக்கப்பட்டு, இந்தப் பகுதியில் தொழில் துவங்கினால் வளருமா-விளங்குமா என ஒதுக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர்.
இன்று பெரம்பலூர் வெளியே தெரிகிற அளவிற்கு வளர்ந்திருப்பதில் தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனங்களும் முக்கிய காரணமாய் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
நூறு வருடப் பாரம்பர்யம் உள்ள கல்வி நிறுவனங்கள் பலவும், உள்ளதைக் கட்டிக்காத்தால் போதும் –விரிவுபடுத்த வேண்டாம்’ எனச் செயல்படுவதைப் பார்க்கிறோம்,
இவர்களோ பதினைந்து வருடங்களில் 17 நிறுவனங்களாக வளர்ந்திருக்கின்றனர். வளர்ந்து கொண்டிருக்கின்றனர். 17 கல்வி நிறுவனங்களுடன் பால் உற்பத்தி, போக்குவரத்து, நிதி நிறுவனம், சர்க்கரை ஆலை, மருத்துவமனை, நட்சத்திர ஓட்டல், மின்உற்பத்தி என இக் குழுமத்தின் விழுதுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.
30 ஆயிரம் மாணவ –மாணவிகளுக்கு மேல் உலகத் தரத்தில் கண்ணீயம் –கலாசாரம் –கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அந்தக் கல்வி நிறுவனங்களை நிறுவி தலைமை ஏற்று நடத்தி வரும் திரு.அ.சீனிவாசன் அவர்கள் பெரிய படிப்பாளியல்ல, வசதியான குடும்பத்தில் –நகரத்தில் –கல்வியாளர்களுக்குப் பிறந்தவருமல்ல.
மிகச் சாதாரண கிராமத்தில் –வறுமை –கஷ்டத்திற்கிடையே படிப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் ஆரம்பப் பள்ளியோடு நின்றுவிட்டவர்.
வசதியில் பிறந்து – வசதியை அனுபவித்து, பாரம்பர்ய செல்வத்தைக் கட்டிக்காக்காமல் அழித்து –அழிந்து போகிறவர்களைக் கூட பார்க்கிறோம். மூதாதையர் அமைத்துக் கொடுத்தவற்றை மேலும் பெருக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
அப்படியிருக்கும் போது எந்தவித அடித்தளமும், சொத்து –சுகம் எதுவுமில்லாமல் சுய உழைப்பில் முன்னுக்கு வந்திருக்கும் சீனிவாசன் நிச்சயமாய் ஒரு முன்னுதாரணம்.
இவரது தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் பெரம்பலூரிலிருந்து மேற்காகத் துறையூர் சாலையில் ஐந்து நிமிடப் பயணத்தில் அமைந்திருக்கின்றன.
கட்டாந்தரையாக, பொட்டாந்தரையாக –வானம் பார்த்துக் கிடந்த அந்த வறண்ட பகுதியில் எங்குப் பார்த்தாலும் கட்டடங்கள்! பசுமையாய்ப் புல் தரைகள்! மரங்கள்! கம்பீரமாய் மதில் வளைவு! உள்ளே நுழைந்தால் அழகான கட்டமைப்பில் சிமெண்ட் சாலைகள்! வெளிநாட்டுப் பல்கலைக்கழக அளவிற்கு வனப்பு! வசீகரம்!
அங்கங்கே சீருடையில் மாணவர்கள்! பசுமை வளர்க்கும் தொழிலாளர்கள்! வகுப்பு முடிந்து ஓய்விற்கு அல்லது சாப்பிட வரிசை கடைப்பிடித்து நடக்கும் பள்ளியினர்!
எல்லாப் பொறுப்புகளையும் தன் தலையில் சுமக்க வேண்டும் என்பது போல கீழ்த் தளத்திலேயே –முகப்பிலேயே –சீனிவாசன் `ஐயா’வின் அலுவலக அறை!
நண்பர் தினத்தந்தி குருவுடன் உள்ளே நுழைந்தால் ஆச்சர்யம்! உடையும் மனமும் வெளுப்பாய் வரவேற்கிறார். முகத்தில் கறுப்பையும் பிரகாசிக்கும் வைக்கிற களை! பார்த்த மாத்திரத்தில் நமக்கும் உற்சாகமேற்கும் மலர்ச்சி; நீண்ட அரைக்கைச் சட்டை! எளிமை! வெகுளி!போலியில்லா –ஆடம்பரம் –ஆர்ப்பாட்டமில்லா –அமைதியான அணுகுமுறை! யதார்த்த நாட்டுப்புறாப்பேச்சு!
கல்வியின் அவசியத்தை உணர்ந்த –உணர்த்தி வரும் அவரைப் பார்க்கும் போது`கர்மவீரர்’ ஞாபகத்திற்கு வருகிறார்.
நாங்கள் அவரைச் சந்திக்கப் போனது மாலை ஆறு மணிக்கு மேல்! அலுவலக நேரம் முடிந்தாலும் –அவருக்கு ஓய்வில்லை. அவரது சிந்தை –செயல் எல்லாம் எல்லாம் கல்வி நிறுவனங்கள் பற்றியே!
மாலையில் நிறுவனங்களைச் சுற்றிப்பார்த்துத் தேவைகளை நேரில் பார்த்து –விசாரித்தறிவது அவரது வழக்கம். மாணவர்களோடு அளவளாவி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி பண்ணுவார்.
`ஐயா’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் அவரின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்து-துணையாக இருந்துவரும் –ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.வெங்கட்ராஜ் அவர்களும் நம்மோடு இணைந்து கொண்டார்.
மாலைச் சிற்றுண்டியாக –பிரசாதம் போல சுண்டல் வருகிறது. கவனிக்கவும்-சுண்டல்!``எடுத்துக்குங்க!’’ என்று `ஐயா’வும் எடுத்துச் சுவைக்கிறார். உதவியாளரை அழைத்து``உப்பு தூக்கலாய்த் தெரிகிறதே! ஹாஸ்டல் மாணவர்களுக்கும் இதுதானே போகும் –கவனமாய் இருங்கப்பா!’’ என்கிறார். ஐயா அவ்வப்போது ஹாஸ்டல் விசிட் செய்து உணவுப் பதார்த்தங்களைப் பரிசோதிப்பதுண்டாம்.
ஹாஸ்டலில் மாலைச் சிற்றுண்டி பெரும்பாலும், சுண்டல், பட்டாணி, வேர்க்கடலை,பயிறு... இப்படி எண்ணெயில்லாச் சத்துணவு!
``பிஸா, பர்கர் அது இதுன்னு கொழுப்பு, எண்ணெயும் தவிர்த்து நமது இயற்கை உணவை இளம் வயதிலேயே மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு’’ என்று புன்னகைக்கிறார்.
``மாணவர்கள் இவற்றை ஏற்றுக் கொள்கிறார்களா வரவேற்கிறார்களா...?
``நிச்சயமாய்.நல்ல பழக்க வழக்கங்கள் -நல்ல குணங்கள், கலாச்சாரம் இவற்றை நல்ல விதமாய் எடுத்துச் சொன்னால் நிச்சயம் யாருமே ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளை நல்லவர்களாக –வல்லவர்களாக உருவாக்கும் பொறுப்புப் பெரியவர்கள் கையில்தான் உள்ளது!’’ என்று புன்னகைக்கிறார்.
``நான் எந்தப் பள்ளிக்கூடத்தில் போய் நீதியும் நியாயமும் கத்துக்கிட்டேன்? வழிகாட்ட –மெருகூட்ட பெற்றோர்களும் இல்லை. எல்லாம் அனுபவம்தான். நான் யாருக்கும் துரோகம் பண்ணியதில்லை. நேரே வா! நேரே போதான்!
யாரையும் எதிரியாய் பாவித்ததில்லை. எனக்கு நண்பர்களும் இல்லை. எந்தக் கெட்ட சகவாசமும் வைத்துக் கொள்வதில்லை. அதனால் நோய் நொடி எதுவும் என்னை நெருங்கினதில்லை. எனக்கு நண்பர்ன்னு சொன்னா அது மனசாட்சி, அப்புறம் கடவுள் மட்டும்தான்.
நண்பர்கள் இல்லைன்னு சொன்னா –நான் யார்ட்டயும் நட்பு பாராட்டறதில்லைன்னு அர்த்தமில்லை, நண்பர்கள்ன்னு வரும்போது பொழுதுபோக்கு, விரும்பியோ விரும்பாமலோ அனாவசிய அரட்டை, சுவாரஸ்யத்திற்காக சின்னச் சின்ன தவறுகள், முறைகேடுகள்ன்னு துணை போக வேண்டி வரும். அதனால் மொத்தமாகவே அதற்கு நான் நேரம் ஒதுக்கிறதில்லை.
ஒதுக்க முடியறதில்லை. அதுக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே நான் என் சொந்தக் காலில் நிற்க வேண்டி வந்த சூழ்நிலை, வறுமை, என் தேவைக்கும் குடும்பத்தின் தேவைக்குமாய் உழைப்பதிற்கிடையே நண்பர்கள் –உல்லாசம்னு –யோசிக்கக் கூட அவகாசமில்லை.
முன்னேறு!முன்னேற்று! இதன் தொடர் வரும்...................