Friday, August 10, 2012

முன்னேறு!முன்னேற்று! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) தொடர் 2


 அது அப்படியே மனதிலும் இரத்தத்திலும் ஊறிப்போச்சு, உழைக்கணும், முயற்சிக்கணும். வளரணும், ஏதாவது செய்து முன்னுக்கு வரணும்.உயரணும். மத்தவங்களையும் உயர்த்தணும்னு ஆரம்பித்த ஓட்டம் இன்னும் தொடர்கிறது!’’

  உதவியாளர் தேநீர் கொண்டு வர ``எடுத்துக்கங்க’’ என்கிறார். அது ஏலம் –எலுமிச்சை-கிம்பு –இஞ்சி கலந்த தே(ன்)நீர்!

   கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களிடம் இரண்டு விதமான மனோபாவங்களைப் பார்க்கலாம். ``நாம் கஷ்டப்பட்டு வளர்ந்தோமே –இவர்கள் எளிதாய் மேலே வந்துவிடுவதா –இவர்களும் கஷ்டப்படட்டுமே’ என ஒரு ரகம்.

   சந்தர்ப்ப –சூழ்நிலையில் நாம் கஷ்டப்பட வேண்டி வந்தது. அந்தக் கஷ்டம் பிறருக்கு வந்துவிடக் கூடாது –இவர்கள் வளர எல்லா உதவியும் செய்து தர வேண்டும் என்று நினைப்பது அடுத்த ரகம்.   சீனிவாசன் ஐயா நிச்சயமாய் இரண்டாம் ரகம்தான்.

   உலகத்தில் ஜனங்களுக்கு மிகமிக அவசியமாய்த் தேவைப்படுவது கல்வி அறிவுதான் அது இல்லாமல் –கிடைக்காமல்தான் நம் நாட்டில் பெரும்பாலும் கீழ் மட்டத்திலேயே அல்லாடுகிறார்கள். அதுவும் குறிப்பாய்ப் பெண்கள். இந்த பகுதியில் சரியான கல்வி நிறுவனங்கள் இல்லாததால் பெண்களைப் படிக்க வைப்பதென்பதே குறைவாயிருந்தது. டவுனுக்கு அனுப்ப வசதிப் பிரச்சனை! அடுத்தது –வெளியே படிக்க வைப்பது பாதுகாப்பில்லாதது என்கிற  எண்ணம்.

  இவற்றிற்கு வழிவகுப்பதுதான் இவர்களின் நோக்கம் அந்த நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் வறண்ட பகுதியில் இத்தனை கல்வி நிறுவனங்கள் சாத்தியமாகுமா?

   ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவ மாணவியர்! எட்டாயிரத்திற்கும் மேல் விடுதியில்! 150 பஸ்கள்! இவற்றில் பெரும்பாலும் இலவசம்! பஸ்ஸிற்கும், கல்விக்கும் பெரிய அளவில் கட்டணங்கள் கிடையாது! ஏழை மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள்!

   இவற்றுடன் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை. அங்கு இலவச சிகிச்சை! பெரம்பலூர் மற்றும் அக்கம் பக்கமிருந்து நோயாளிகல் பயணிக்க வாகனங்கள். அவையும் இலவசம்!.

                                                         (2)

  சீனிவாசனின் சொந்த ஊர்,  புகுந்த ஊர் எல்லாமே பெரம்பலூர் அருகேதான். இவரது தந்தை அருணாசல ரெட்டியாரின் ஊர் பெரகம்பி எனும் கிராமம். அப்பாவுக்கு மூன்று உடன் பிறப்புகள். அங்குச் சாதாரண விவசாயக் குடும்பம்.

  சொந்த ஊரில் பிழைக்க முடியாமல், அப்பா, அருகில் புது நடுவலூர் எனும் கிராமத்திற்குக் குடி பெயர்ந்திருந்தார். அங்கும் விவசாயம் தான்! அங்கும் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை!

  சீனிவாசனுடன் பிறந்தவர்கள் 5 பேர்கள். இவர் 6வது கடைசி, மூன்று உடன்பிறப்புகல் சின்ன வயதிலேயே காலரா நோய் தாக்கி இறந்து போனார்கள்.

   இங்கே அவசியம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

   சீனிவாசனின் இன்றைய வளர்ச்சி –எதைத் தொட்டாலும் சிறக்கும் –சிறப்பிக்கும் –வெற்றி பெறச் செய்யும் பாங்கு இவற்றை வைத்து இவர் `அதிர்ஷ்டசாலி’ என்று பேசுபவர்கள் உண்டு.

  அதிர்ஷ்டம் –துரதிர்ஷ்டம் இவற்றில் இவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. இவரது மூலதனம் –உழைப்பு –முயற்சி –போராட்டம் – தன்னம்பிக்கை!

  ஊரோடு ஒத்துக் கும்பலாய்ச் செயல்படுதல் –காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுதல் –அவையோடு அடித்துச் செல்லப்படுதல் –ஆற்று நீரோட்டத்தில் கலத்தல் இப்படி எந்தவித `சாமர்த்திய’மும் இவரிடம் இருந்ததில்லை.

  வாழ்க்கை முழுக்கவே இவருக்கு எதிர் நீச்சல்தான்! வெள்ளம், கடற்சுழற்சி, சுனாமி என்று எப்படி வர்ணித்தாலும், அவற்றிற்கு எதிராய்ப் போராடி –சோதனைகள் வர வர அவற்றை எதிர்த்து முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம்!

   அந்தந்தக் காலகட்டத்தில் தோல்விகளும், பிரச்சனைகளும் மனச் சங்கடத்தை  ஏற்படுத்தினாலும் கூட அதற்காக இவர் தளர்ந்து போவதில்லை.

   எதிர்ப்பு இவருக்கு எழுச்சி தரும். வெகுண்டெழ வைக்கும் உந்து சக்தி! எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அவற்றை மீறி வெல்ல வேண்டும். வென்று காட்ட வேண்டும் என்கிற ஊக்க மருந்தாகவே இவர் தடைகளையும், எதிர்ப்புகளையும் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

   கவனத்தை எந்த நேரத்திலும் வேறு எதிலும் கசிய விடுவதில்லை. ஒரே சிந்தை! ஒரே செயல்! அதனால் இவருக்கு எதிரிகளே கிடையாது. எதிரிகளாக –போட்டியாளராக யாரையும் நினைப்பதுமில்லை. தொழில் போட்டியாக ஆரம்பிப்பவருக்குக் கூட கை கொடுத்துத் தூக்கிவிடுவதுதான் இவரது சுபாவம்.

   இங்கே யாரும் யாருக்கும் எதிரியில்லை. போட்டியாளர்கள் இல்லை. அவரவர்களுக்கு உள்ளது அவரவர்க்கு! முதலில் தன்னை உணரனும். தன் பலம் அறியணும். அதற்குக் களம் அமைத்து அதற்கு ஏற்றபடி செயல்படணும். எந்தத் தருணத்திலும் நாணயம் தவறக்கூடாது நன்றி மறத்தல் கூடாது.

   வாழ்க்கையில் பணம் –காசு –சொத்து சுகம் இல்லாமல் இருக்கலாம். நம்பிக்கை –நாணயம் தவறக் கூடாது. அதில் உறுதி காப்பவர்.

   இவர் தப்பான வழிக்குச் செல்வதில்லை. கூட இருப்பவர்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அறிவுறுத்துவார். அதே போல பொய் பித்தலாட்டம் கூடாது. வாக்குக் காப்பாற்ற வேண்டும்.

   ஓரிடத்தில் ஒரு உதவியோ, பணமோ பெற்றால் அதைத் திருப்பிச் செலுத்துகிற மனப்பக்குவம் வேண்டும். அந்த உத்தரவாதமும் பொறுப்பும் இல்லாதபோது பிறரிடம் கைநீட்டவே கூடாது!

   இந்த மாதிரி இளம் பருவத்திலேயே இவருக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடுவதுண்டு. ரத்தத்தில் கீதையும், புத்தரும், விவேகானந்தரும் கலந்திருந்தனர்.

   எந்த அளவிற்கு அதிர்ஷ்டக்காரர் –எப்படியெல்லாம் அதிர்ஷ்டமும், ராசியும் அவருக்கு உறுதுணையாயிருந்திருக்கிறது?

   சீனிவாசன், பத்து மாத குழந்தையாயிருக்கும்போதே தாய் பெரியம்மாள் இறந்து போனார், அம்மாவிற்கு என்ன நோய் –என்னாயிற்று என்று தெரியாது –திடீரென வயிறு வீங்கி –அக்கம்பக்கம் போதுமான மருத்துவமனையில்லாமல் –டவுனுக்குக் கொண்டு போய்ச் சிகிச்சை கொடுக்க முடியாமல் இறந்து போனார். அம்மா இறந்த அதிர்ச்சி –துக்கத்தில் உழன்று அதிலிருந்து மீள முடியாமலேயே அடுத்த இரண்டு மாதத்தில் அப்பாவும் இறப்பு.

   வீட்டில் கடைசிப் பிள்ளையாய்ப் பிறந்து –பெற்றோர்களின் அடையாளமே தெரியாமல் அவர்களின் முகங்களைக் கூட ஞாபகப் படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு `அதிர்ஷ்டசாலி’ இவர்.

   அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா  ஒருவரும்கூட இறப்பு!

   எந்தவித ஆதரவுமின்றி கைக்குழந்தையாயிருந்த இவரை எடுத்து வளர்த்தது பாட்டி! தாய்வழிப் பாட்டி! அவர் கண்ணாப்பாடி எனும் கிராமத்திலிருந்தார். அவரும் தாத்தாவை இழந்து தனி மரமாசு!

   அங்கே சமாளிக்கக்கூடிய அளவிற்குக் கொஞ்சம் வசதி இருந்தது. அதன்பிறகு இவரது குடும்பத்திற்கு எல்லாமே பாட்டிதான்! அன்பு –ஆதரவு –நல்லொழுக்கம் –நற்சிந்தனைகளை போதித்தல் – ஊக்கம் –உற்சாகம் தந்து வளர்த்த்தெல்லாம் அவர்தான்.

   பாட்டி, தன் பேரப்பசங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி சீராட்டி, பாராட்டித்தான் வளர்த்தார். ஆனால் இவரது அண்ணன்கள் இருவர் பொறுப்பாய் இல்லை. வீட்டைப் பகைத்துக் கொண்டு எதிர்மறையாய்ச் செயல்பட ஆரம்பித்தனர். வேண்டாத கூட்டுச் சேர்ந்து ஊதாரித்தனம்!