Friday, July 5, 2013

உடல் நலப்பரிசோதனை - எந்த அளவுக்கு நலமானது?



உடல் நலப்பரிசோதனை - எந்த

 அளவுக்கு நலமானது? 



உயர் தொழில்நுட்ப நவீன மருத்துவம் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிறையச் செய்திருக்கிற அதேவேளையில், அது ஆரோக்கியமாகத் தோன்றும் ஒருவருக்கு அளவுக்கு மிகுதியாக ஆய்வு மேற்கொள்வதன் மூலமும் அளவுக்கு மிகுதியாக சிகிச்சை அளிப்பதன் மூலமும் அநீதியை ஏற்படுத்திக் கொண்டிருகிறது என்று தெரிகிறது. விரிவான, தேவையற்ற உடல்நலப் பரிசோதனைகள் நல்ல உடல் நலமுள்ள பல நபர்களிடம் முக்கியத்துவமற்ற இயல்பு மீறிய மாற்றங்களை வெளிப்படுத்தலாம். ‘முழு உடல் நுண்ணோக்கி’யின் வருகை, பலவகை ஆய்வக சோதனைகளும் பரிசோதனை நடைமுறைகள் காரணமாக எந்தத் தலையீடும் தேவையில்லாத முக்கியத்துவமற்ற குறைபாடுகளை கண்டுபிடிப்பதன் மூலம் ஒவ்வொருவரையும் ‘நோயாளி’யாக ‘ஆக்கி’ விட முடியும். இந்தக் ‘குறைபாடுகளை’ கண்டுபிடிப்பது தொழில்நுட்பம், மருந்துத் தயாரிப்பு மற்றும் மருத்துவத் தொழில் துறைக்கு வியாபாரக் கண்ணோட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

‘மருத்துவத்தின் தந்தை’ ஹிப்போகிரேடஸ் மருந்து என்ற சொல்லை ‘தொழில்துறை’ என்ற சொல்லுடன் தொடர்புபடுத்துவதற்கு மன்னிப்பாராக, ஏனென்றால் அவர் கி.மு 377ல் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு மருத்துவத்திற்கு என்ன ஆயிற்று என்று அறியமாட்டார்! ‘உடல் நலப் பரிசோதனைகள்’ குறித்த தற்கால பீதியூட்டல் அதன் நியாயத்திற்குப் பொருந்தக்கூடியதாக இல்லை, ஏனென்றால் அதன் சந்தைப்படுத்தலும் பயன்படுத்தலும் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன- பெரும்பாலும் மோசமான வியாபார நோக்கங்கள் கொண்டவையாகவும் நோயாளிகளிடம் பணம் பறிப்பவையாகவும் இருக்கின்றன. ஆராய்ச்சியிலும் அறிக்கையளிப்பதிலும் சந்தைப்படுத்துதலிலும் அறிவியலை மனித நலத்திற்குப் பயன்படுத்துவதிலும் தரமும் நேர்மையும் குறைந்து கொண்டே வருவது சீரழிவைத் தடுத்துநிறுத்துவதற்கான திறனாய்வுக் கருத்துக்களைக் கோருகின்றன.

“ஒரு ‘இசிவு’ (ஸ்ட்ரோக்) நோவைத் தடுப்பதற்கு நாம் 850 இயல்பான நிலையில் உள்ள நபர்களுக்கு தேவையற்ற வகையில் இரத்த அழுத்த எதிர்ப்பு மருத்துகளை (அவை பக்கவிளைவுகள் இல்லாதவையல்ல) ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது.” பெருவணிக முதலாளிகள் ‘இயல்பான உடல்நிலைகளை’ (ரத்த அழுத்தத்தின் குறைந்த நிலை அளவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் இன்ன பிறவற்றின் இயல்பான நிலைகளை) ‘பணம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளச் செய்தல்’ மூலம் தொடர்ந்து குறைவாக வைத்திருக்க முயற்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் பல லட்சக்கணக்கான இயல்பான உடல் நலம் உள்ளவர்களை நோயாளிகளாக முத்திரை குத்தித் தங்கள் பணப்பெட்டியை நிறைத்துக் கொள்கிறார்கள்! மேலும் எளிதில் நம்பிவிடும் மருத்துவர்களாகிய நாம் அவர்களின் உயர்ந்த சக்திவாய்ந்த சந்தை உத்திகளின் மூலம் கொண்டுவந்து கொட்டப்படும் அந்த ‘அறிவியல்’ அறிக்கைகளை வேதவாக்குகளாக எடுத்துக்கொள்கிறோம்.

அவர்கள் மருத்துவத் தொழில்முறையாளர்களை மூளைச் சலவை செய்கின்றனர், அவர்களுடைய மூளைகளை பிற நேர்மையற்ற வழிகளில் தங்களுக்கேற்ப ஒழுங்குபடுத்துகின்றனர். இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் பலவற்றின் அளவுகளின் இயல்பான வரம்புகளை மாற்றுவதற்கு அறிவியல் அடிப்படையை ‘உருவாக்குவதன்’ மூலம் உடல் நலத்துடன் இருக்கும் மக்கள் தொகையை புதிய நோயாளிகளாக ‘ஆக்கி’ தங்கள் சுயநலத்துக்காக நோய்களின் வலைகளில் வீழச் செய்ய இந்தத் தொழில்துறையினர் முடிவற்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் மேலும் மேலும் பணம் சேர்ப்பதற்காகத் காகிதத்தாள்களில் கூடப் புதிய நோய்களை உருவாக்குகிறார்கள். இந்தக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வும் தப்பிக்க முடியாத ‘கூடுதல் ஆய்வு’களும் மகிழ்ச்சியைப் பறித்து, பீதி காரணமாக உடல் நலத்தைச் சீர்குலைத்து, மன அழுத்தத்தையும் மனநோயையும் கூட உருவாக்குகின்றன.

பார்ப்பதற்கு நல்ல உடல்நிலையுடன் இருக்கும் தனிநபர்கள் பலருக்கும், குறிப்பிடத்தக்க பிரச்சனைகளையும் பொதுவான நோய்களையும் கண்டறிவதற்கு அல்லது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஒரு உளவியல் ரீதியான திருப்தியை பெறுவதற்கும் ஒரு சில அடிப்படை ஆய்வுகளும் முழுமையான மருத்துவமனை பரிசோதனைகளும் மட்டுமே போதுமானவையாகும்.

ஒவ்வொரு அற்பமான அறிகுறிக்கும் (குடும்ப மருத்துவர்களை- ஏறத்தாழ அழிந்துவிட்ட ஒரு இனம் – அணுகாமல்) சிறப்பு மருத்துவமனைகளுக்கு விரைவதும் தேவையற்ற பரிசோதனைகளுக்கு உள்ளாவதும் நீண்ட மருந்துகளின் பட்டியலைப் பெறுவதும் உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்துடையவர்களிடையே ஒரு நாகரீகம் ஆகிவிட்டது. எனது நோயாளிகளில் சிலர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளின் தடித்த கோப்புக்களை மிகவும் பெருமிதத்துடனும் திருப்தியுடனும் என்னிடம் காட்டி, அவை அவர்கள் வாழும் அனைத்து மோசமான வாழ்க்கைப் பாணிக்கும் பரிகாரமாக எண்ணிக்கொண்டு தாம் தொடர்ச்சியாக உடல்நலப் பரிசோதனைகள் செய்து கொள்வதையும் ஆஸ்பிரின், அடோர்வாஸ்டேட்டின், அல்ப்ரஜோலம் (இதய நோய்ப் பிரச்சனைக்கானவையாகக் கருதப்படும் மூன்று ‘அ’ மருந்துகள்)மற்றும் பல மருந்துகளையும் வழக்கமாக எடுத்துக்கொள்வதையும் கூறுவார்கள். அவர்களில் பலர் முன்னதாகவே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொள்வார்கள்.

மீரா- இது அப்பெண்ணின் மாற்றுப் பெயர்- ஒரு வாரமாக சளியாலும் தலைவலியாலும் துன்புற்று நேராக ஒரு நரம்பியல் நிபுணரிடம் சென்றார். அவர் மிகச் சரியாக ஒரு மூளை நுண்நோக்கு ஆய்வுக்கு உத்தரவிட்டார், அது சில வயது தொடர்பான மாற்றங்களைக் காட்டியது. அந்த நுண்ணோக்கி அறிக்கையில் இருந்த ‘இயல்புக்கு மாறான குறைபாடுகளை’ படித்த பிறகு கவலையடைந்த மீரா தனது பசியை இழந்து எடையிழக்கத் தொடங்கினார். பின்னர், அவர் காது மூக்கு தொண்டை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். அந்த அறிக்கை மூக்கில் ஒரு சிறிய (அற்பமான) சதை வளர்ச்சியை காட்டியது. உள்நோக்கி அறிக்கையைப் பார்த்த அப்பெண்மணி கொஞ்சநஞ்சம் இருந்த பசியையும் இழந்து மன அழுத்தத்திற்குள்ளானார். எடையிழப்பு ஒரு நுரையீரல் தொடர்பான சோதனைக்கு வழிவகுத்தது. மேலும் நுரையீரல் தொடர்பான நுண்ணோக்கி ஆய்விலிருந்து நுரையீரல் செயல்பாடு குறித்த ஆய்வுகள் அனைத்தும் எடுக்கப்பட்டன.

மிகக்கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்பட்ட மீரா ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அனைத்து சிறப்பு மருத்துவர்களும் வந்து பார்த்து கழுகுகளைப் போல அவரவர் பங்குக்கான தொகைகளை கொத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒரு உளவியல் மருத்துவரும் இருந்தார். மருத்துவர்களாகிய நாங்கள் வழக்கமாக கைகழுவி விடுவதற்கு அவரிடம் தான் அனுப்புவோம். இறுதியாக, மனஅழுத்தம் (மருத்துவர்கள் தூண்டிய உளவியல் மற்றும் நிதி அழுத்தம்) தூண்டிவிட்ட பசியிழப்பு மற்றும் எடையிழப்பு தவிர எந்த குறிப்பிடத்தக்க குறைபாடும் கண்டறியப்பட முடியவில்லை. முதலில் வந்த சளி மற்றும் தலைவலிப் பிரச்சனை ஒருவேளை தானாகவே சரியாகிவிட்டிருக்கலாம். ஏனென்றால் இயற்கையாகவே, “சளிக்கு மருந்து எடுத்துக் கொண்டால் ஒருவாரத்தில் சரியாகும், மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் ஏழுநாட்களில் சரியாகும்.” கலைப்பட்டதாரியான மீரா ‘சான்று அடிப்படையிலான’ மருத்துவத்தின் பெயரால் வயிற்றையோ மண்டையோட்டையோ கிழிக்காமல் போனதற்காக அதிர்ஷ்டம் அடித்ததாக கருதிக் கொள்ளவேண்டும்.

பெண்டாகாஸ்ட் இதழின் தலைமை ஆசிரியரும் மற்றும் வோர்ட்ஸ்மித் கம்யூனிகேசனில் வோர்ட்ஸ்மித்தின் நிறுவனரும் தலைவருமாகிய பிரிதம் பட்டாசார்ஜி இந்தப்பொருள் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றி விவரித்துக்கொண்டிருந்த போது எனக்கு பின்வருமாறு எழுதினார்: “எடின்பர்க்கில், தேசிய உடல்நல சேவை நிறுவனத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்து கொள்ள நான் சென்றேன். எழுத்துப் பூர்வமான சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, அடுத்தவாரம் ஒரு உடல்நலப் பரிசோதனைக்கு வருமாறு கூறினார்கள். நான் உளப்பூர்வமாக அந்தப் பெண்ணிடம், “அதற்குப் பிறகு நான் மீண்டும் வரவேண்டிய தேவை இருக்கக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறினேன். அந்தப் பெண்ணின் புருவங்கள் சுருங்கின, பின்னர் நான் கூறினேன்: 'என்னுடைய பிரார்த்தனை உளப்பூர்வமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?' அந்தப் பெண் அதைப் புரிந்து கொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.”

மருத்துவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ள இடங்களில் நோய்க்குறிகள் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
நன்றி: தி இந்து நாளிதழ் 15.01.2012