Monday, October 22, 2012

முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்)பகுதி 4


சின்ன வயதிலேயே இதற்கு முன்பும் சீனிவாசன் சென்னைக்குப் போயிருக்கிறார். நண்பர் ஒருவர் இவரை வால்டாக்ஸ் ரோடில் ஒத்தக்கடை தியேட்டரில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.

   அங்கு எடுப்பு வேலை, நாற்காலி தூக்கணும், துடைத்துச் சுத்தம் செய்யணும். காலையில் 1 பணம், இரவு 1 பணம் கூலி கிடைக்கும்.

   அதையே கை மேல் பலனாய் நினைப்பார். கையில் காசு பார்க்கும் சந்தோஷம். உழைப்பின் ஊதியம்! சின்னதோ பெரிதோ பலன் உடன் கிடைக்கிறது. வருமானம் கண்முன் தெரிகிறது.

   விவசாயத்தில் உடனே எதையும் எதிர்பார்க்க முடியாது. நிலம் சுத்தம் பண்ணி –உழுது –பயிரிட்டு –களை பறித்து –மருந்தடித்து –உரமிட்டு –மழை –இயற்கை சீற்றத்துக்குப் போராடி –ஈடு கொடுத்து –இரவு பகலாய்ப் பாடுபட்டாலும் –மூன்று மாதமோ –ஆறு மாதமோ கழித்துத்தான் பலன் தெரியும்.

   தானியம் வீட்டுக்கு வந்தாலும்கூட விற்கும்போது உரிய விலை கிடைக்காது. தூக்கிச் சுமந்து கொண்டு போய்ப் போன விலைக்குத் தள்ள வேண்டும்!

   ஆனால் –அங்கே –மதிப்பு மரியாதையில்லாவிட்டாலும் உடனே காசு கிடைக்கிறது! சொத்து சுகமில்லாவிட்டாலும் எங்கே வேண்டுமானாலும் போய்ப் பிழைக்கலாம் என்கிற தன்னம்பிக்கை அவருக்கு அப்போது வந்திருந்தது.

   அந்தத் துணிச்சல் காரணமாய் –வானமே எல்லை –பூமியில் எதுவும் இல்லாமலில்லை –ஒரே வானம் –ஒரே பூமி –எல்லாம் நமதே என்று பொள்ளாச்சிக்கு ஓட்டம்!

    ஆழியாறு டேமில் கல் தூக்கினார். அங்கு ஒருவாரம் பத்து நாட்கள் சம்பாதித்துச் சென்னைக்குப் பயணம்!

    வால்டாக்ஸ் ரோட்டில் சுந்தர் லாட்ஜில் தங்கி அங்கு இரவு கடையில் மாலை 4 முதல் 11 வரை எடுபிடி. 60 ரூபாய் சம்பளம், கூட வேலை பார்த்தவர்கள் பகலில் தூங்கி அல்லது ஊர் சுற்றிப் பொழுதைக் கழிக்க, சீனிவாசனுக்கு அப்படி வெட்டியாய்ச் சுற்றித் திரிய மனமில்லை.

   சும்மா சுற்றுவதற்குப் பதில் பகலிலும் ஏதாவது வேலை செய்யலாமே என்று வேலை தேடினார். எக்மோர் சந்திரபவனில் கிடைத்தது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரை –அங்கும் 60 ரூபாய் சம்பளம்.

   இரண்டு இடத்திலும் தொடர்ந்து வேலை. ஓய்வு கிடையாது. லீவ் எடுப்பதில்லை. எந்த  ஒரு காரியத்திலும் ஆத்மார்த்தமாய், மனம் ஒன்றி ஈடுபட்டால் உடல் சோர்வதில்லை. ஓய்வும் தேடுவதில்லை, உற்சாகமாய்ச் செயல்பட முடியும்.

   முடிந்தது!

   இதற்கிடையில் பாட்டிக்கு உடம்பு முடியாமல் போக – சீனிவாசனைத் தேடியிருக்கிறார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு எப்படியோ தகவல் பெற்று அண்ணன் இவரைத் தேடி வந்து விட்டார், கண்டுபிடித்து -``வா ஊருக்குப் போகலாம் –பாட்டி உன் நினைப்பில் வாடுகிறது ‘’என்று அழைத்தார். உடன் இவரது மனதும் கரைந்து போயிற்று, பாட்டி நினைப்பு எடுக்க -``சரி போய் ஒரு எட்டு பார்த்து வருவோம்’’ என்று கிளம்பினார்.

(4)

   விவசாயம் என்பது இன்று மட்டுமில்லை அன்றும்கூட லாபகரமானதாய் இல்லை. விவசாய நாடு என்கிறோம். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்போம். ஆனால் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவரும் கண்டுகொள்ள மாட்டோம்.

   தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை. கெளரவம் பார்த்துக் கொண்டு ஆட்கள் நகரத்திற்கு படையெடுத்தல்! பட்டணம் என்றால் சொகுசு வேலை – சொகுசாய் இருக்கலாம் என்கிற கனவு.

      கஷ்டப்பட்டுப் பயிர்களை வளர்த்தாலும் நோய்த்  தாக்குதல், பூச்சி, அரிப்பு! மருந்தடித்து மாள்வதில்லை. தேவைக்கு மழை இல்லாமல் அறுவடை சமயம் வந்து அழித்தல்!

   முன்பெல்லாம் ஆடு,   மாடுகள் கிராமங்களில் பெருத்திருக்கும். மாடுகள் –வண்டி –ஏர்- அவற்றிற்குத் தீவனம் –அவற்றின் மூலம் பால்  -எரு என இயற்கையோடு ஒன்றி –செயல்பட்ட காலத்திலும் கூட நஷ்டம்.

   என்னதான் முனைந்து பாடுபட்டாலும்,எதிர்ப்பார்க்கிற பலன் விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. எல்லாப் பிரச்சனைகளையும்  மீறி மகசூல் எடுத்தாலும் கூட உரிய விலை கிடைப்பதில்லை.

   ஆகையால் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்து பிரயோஜனமில்லை என்பது சீனிவாசனுக்குப் புரிந்தது. இளம் ரத்தம். உள்ளுக்குள் வேகம் –உடலில் தெம்பு! மனதில் மமதை! நம்மால் முடியும் –முடியாதது எதுவுமில்லை என்கிர வெறி.

   ஊரில் வானம் பார்த்த பூமி ஆறு மாதத்திற்கு மட்டுமே வேலை. மற்ற நாட்களில் வெட்டியாய்ப் பொழுது போக்குவரத்து இவருக்குப் பிடிப்பதில்லை. உருப்படியாய் எதுவும் செய்யாமல் –வாழ்வை வீண்டிக்கிறோம் என்கிற உறுத்தல்.

   வேலையில்லை –சும்மாயிருக்கிறோம் என்பதற்காக ஊரை விட்டுப் போக முடியாது! விவசாயப் பணிகள் இல்லாவிட்டாலும் கூட மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வயிலிலும் சின்னச்சின்ன வளப்படுத்தும் வேலைகளையும் செய்தாகணும்.

   நிலங்களையும் கவனித்துக் கொண்டு, அதிகப்படி வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்கிற யோசனை போயிற்று.அப்போது உதித்தது  மளிகைக்கடை! அத்துடன் டீ ஸ்டால்! அப்புறம் சைக்கிள் கடை!

   கடை என்று ஆரம்பித்த பின்பு –பலருடனும் பழகும் வாய்ப்பு! செல்வாக்கு! அத்துடன் கொஞ்சம் செருக்கும் தோன்றும். எப்போதும் எதிலாவது உடலைச் செலுத்தும் போது திருப்தி. மனதும் செழிக்கும், உடலும் வளப்படும், நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையும் வளர ஆரம்பித்தது.

   புது நடுவலூரில் கடை வளர்ந்து வந்த போது சீனிவாசனின் அண்ணன் ஒருவர் இறந்து போனார், கடைக்கும், வயலுக்கும் ஆள் தேவைப்பட்டது.

    அப்போது 1959.

   இன்னொரு அண்ணன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஆதரவில்லாமல் இருக்கவே சீனிவாசன் அவரை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    அதுவரைப் பட்ட கஷ்டமெல்லாம் போய்ச் செல்வாக்குடன் அவர் முன்னுக்கு வரும்போது கண்படுகிற மாதிரி சிக்கல் ஒன்று இவரது கதவைத் தட்டிற்று.

    ஆக்கல் என்பது கடினம், அழிப்பது ரொம்ப எளிது. கிராமத்தில் அடிமட்டத்தில் கிடந்த ஒருவன் –அதுவும் சிறுவன் வேகமாய் முன்னுக்கு வருகிறான் என்பதைப் பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

   இவனை எங்கே தட்டலாம் –எப்படிக் குழி பறிக்கலாம் என்று பலரும் பார்த்திருந்தனர். சீனிவாசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எந்த பிரச்சனைக்கும் இடம் தராமல் காரியமே கண்ணாய் இருந்தார்.

  அங்கு ஊரில் அப்போது ராஜ் ரெட்டியார் என்பவர் மிகவும் செல்வாக்குடன் இருந்தார். வசதி –மிடுக்கு –செருக்கு என எல்லாமும் கொண்டவர். அவருக்கு ஒரு மகள்.

   அவள் கடைக்கு வரப்போக –சும்மா திரிவதைச் சிலர் திரித்துவிட்டனர். தீ கொளுத்திப் போட்டனர்.