Monday, September 24, 2012
நல்லதங்காள்
தமிழ்மொழியில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இது பிரிசுரிக்கப்பட்ட ஆண்டு 1879.இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலாகும். இது வசன நடையில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
ஆதியூர் அவதானி சரிதம் என்ற ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நூல் முதன் முதலில் 1875-ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. இது பாட்டு (கவிதை) வடிவில் இருக்கிறது. இதை எழுதியவர் து.வி. சேஸய்யங்கார். கவிதை வடிவில் எழுதியுள்ளதை நாவல் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே ஆதியூர் அவதானி சரிதம், பாட்டு வடிவில் இருந்தாலும் அதுவும் நாவல்தான் என்று சாதிக்க சிலர் சில காலமாக முயற்சி செய்து வந்தார்கள். எழுத்து துறையில் பத்திரிகை தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த இதை ஒரு சாதகமாகப் பயன்படுத்த நினைப்பார்கள்.
“அமுத சுரபி” என்ற மாத இதழில் (1.9.1989) ‘கிட்டி’ என்ற எழுத்தாளர் தம்முடைய கட்டுரையில் கூரியது.
“வடிவம் ஒன்றைத்தவிர , மற்ற எல்லா அம்சங்களிலும் நாவல் என்று ஓட்டிகொள்ளக்ககூடிய, இந்த படைப்பு தமிழ் உரை நடையில் இந்த வடிவம் வருவதற்கு முன்பு, தோன்றிவிட்டதால், முதல் தமிழ் நாவல் என்றாகிவிடுகிறது”.
அசோகமித்திரன் என்ற எழுத்தாளர், ‘சில இந்திய மொழிகளில் முதல் நாவல்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதன் முதல் பதிப்பு 2001-ல் வெளியிடப்பட்டது. இந்த நூலில், ஆதியூர் அவதானி சரிதம் என்ற நூல் பற்றி அவர் எழுதியது.
(பக்கம் 143)”சேஷய்யங்கார் தன் படைப்பை அதன் வடிவம் காரனமாகச் சலசலப்புக்கு உட்பட வைத்துவிட்டார். சேஷய்யாங்க்காருடைய படைப்பை சந்தேகமற நாவல்தான் என்று கூற முடியாவிட்டால் 1875-ஆம் ஆண்டிலேயே தமிழ் நாட்டிலும் ஜாதி, ஆசாரம், திருமணம், விதைவைகள் நிலைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து எழுத்தில் வடித்து, செயலிலும் காட்டியது தமிழ் நாவல் வரலாற்றில் அவசியம் இடம் பெற வேண்டியதே”
இவர்களுடைய முயற்சியெல்லாம் கிறிஸ்தவர் எழுதிய நூல்களை முதல் நிலையிலிருந்து இறக்கி, பிராமணர் எழுதிய நூலுக்கு கெளரவம் தேடித்தந்த நம் முயற்சியாகும்.
வசன நடையில் இல்லதிருந்தளும்கூட, பாட்டு நடையில் சமூகப்பார்வை கொண்டதாக இருக்குமேயானால் அது நாவல் என்று சொல்கிறார். இவர்களும் ‘நல்லதங்காள்’ கதை தெரியுமா?
புகழேந்தி என்றொரு தமிழ் புலவர், வாழ்ந்த காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் எழுதிய நூல்களில் ஒன்று ‘நல்லதங்காள்’ என்ற நூல். இது பாட்டு நடையில் எழுதப்பட்டது. இவர்களது அர்த்தத்தின்படி சமூகப்பார்வையில் சமூகப் பிரச்சினையை பாட்டாகச் சொல்லும் யதார்த்த நூல்.
நல்லதங்காள் என்ற குடும்ப பெண்ணிற்கு ஏழு குழந்தைகள். கணவர் வெளிதேசம் சென்றவன், பல காலமாகியும் திரும்பி வீடு வரவில்லை. குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு நல்லதங்காள் பக்கத்து நாட்டிலுள்ள அண்ணன் வீட்டிற்குப் போகிறாள். அண்ணன் அந்நிய நாட்டிற்கு திரும்பவில்லை. அண்ணியின் பெயர் அலங்காரி. அண்ணியின் கொடுமையைத் தாங்கமுடியாமல், பசியால் தவிக்கும் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி அருகாமையிலுள்ள காட்டில் உள்ள கிணற்றில் விழுந்து மடிந்தாள். நல்லதங்காளை தேடிக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு கணவன் வந்தான், வீடு திரும்பி வந்த அண்ணனும் நல்லதங்காளை தேடிச்சென்று, குழந்தைகளும் நல்லதங்காளும் மாண்டுபோனதைக் கண்டு கதறி அழுதார்கள் .
இது நல்லதங்காள் கதை. எனவே சேஷய்யங்கார் எழுதிய ஆதியூர் அவைதனை சரிதம் தமிழில் எழுதப்பட்ட ‘முதல் நாவல்’ அல்ல. வேதநாயகம் பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரிதம்” தான் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்.....
Friday, September 21, 2012
முன்னேறு!முன்னேற்று!! (சாதனையாளர் திரு.அ.சீனிவாசன்) பகுதி
வறுமை ஒரு பக்கம் என்றால், வீட்டிக்ல் அண்ணன்களின் அடாவடித்தனம் இன்னொரு பக்கம், தலைவலி ஏற்படுத்திற்று. சாதாரணமாய் மூத்தவர்கள் பொறுப்பாய் நடந்து குடும்பத்தையும் இளையவர்களையும் காப்பாற்றுவதுண்டு. இங்கே அவர் விஷயத்தில் எதிர்மறை அப்படி ஒரு `அதிர்ஷ்டம்’ இவருக்கு!
இருவரும் கஷ்டநஷ்டத்தை உணர்வதில்லை, உழைப்பதில்லை,உழைக்கத் தயாராகவும் இல்லை. வேண்டாத சிநேகத்தில் –வேண்டாத பழக்கவழக்கங்கள்! எதுவும் எளிதாய்க் கிடைக்க வேண்டும் சொகுசு வேண்டும் –ஊதாரித்தனம்!
உழைக்காமல், சம்பாதிக்காமல் சொகுசு எப்படி வரும்? ஊரில் சோம்பேறிகளாய் எப்போதும் ஒரு கோஷ்டி இருப்பதுண்டு, முச்சந்தியிலும், டீக்கடையிலும் அமர்ந்து அரட்டை, எகத்தாளம், ஊர்வம்பு!
இந்தக் கும்பலில் அண்ணன்களும் சேர்ந்து கெட்டுப்போக ஆரம்பித்தனர். பாட்டியின் பேச்சு அவர்களிடம் எடுபடவில்லை. கண்டித்தால் எகிறுவர்.
வயலில் வந்து வேலை செய்வதில்லை. உதவுவதில்லை.ஆனால் அறுவடை சமயத்தில் வரும் வருமானத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப்போய் அது தீர்ந்த பின்பு திரும்பி வருவர். அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது, திருத்த முடியாது. சீனிவாசனுக்கு வெறுத்தப் போகும் எதிர்த்துப் பேசினால் அடிவிழும்.
சின்ன வயதில் அவற்றை எதிர்கொள்ளும் –தாங்கும் உடல்வலிமையும் மனோதிடமும் சீனிவாசனிடம் இருந்ததில்லை. பயம், தயக்கம், ஒரு சமயம் வீட்டிலிருந்து எதுவும் கிடைக்காமல் போகவே, அண்ணன்கள், பாட்டி வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு ஓடிப் போயினர்.
எல்லாக் கஷ்டத்தையும் இளமையிலேயே சீனிவாசன் தாங்க வேண்டிய கட்டாயம். பாட்டியை நினைத்து அவரும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். அவரது மனதில் எப்போதும் நாம் வளரணும், முன்னேறணும் –என்கிற தீ! பாட்டி கொடுத்த உற்சாகம் –நிச்சயம் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திற்று.
வீடு –காடு –மாடுகள் எனப்பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சீனிவாசனால் பள்ளிக்கும் சரியாய்ப் போக முடியவில்லை. நாலாம் வகுப்புக்குப் பிறகு பார்க்க முடியாத நிலைமை.
அந்த நாட்களில் பள்ளிக் கட்டணமாக நெல் அல்லது வரகு –என்றால் இரு மடங்கு தர வேண்டும். வாத்தியார்களுக்குக் காய்கறி பால்! இப்படி எல்லாம் தரணும். இவற்றைத் தர முடியாமல் போனதும் கூட படிப்பை நிறுத்துவதற்குக் காரணமாயிற்று.
படிப்பு இல்லாவிட்டால் என்ன –வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களெல்லாம் நிரம்பப் படித்துவிட்டா வந்தார்கள்? நாமும் அவர்களைப் போல முன்னுக்கு வருவோம் எனக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.
இவருக்கு ஊக்கம் தந்தது ஒரு பக்கம் பாட்டி –மறுபக்கத்தில் எம்.ஜி.ஆரின் படங்கள். அவரது படப்பாடல்கள்! அவரது படத்தில் போதிக்கும் விஷயங்கள் எல்லாம் இவரை வளப்படுத்தின. தன்னம்பிக்கையை ஏற்படுத்தி நேர்மை –நியாயம் –கடமை –கண்ணியம் –கட்டுப்பாடுப் பாதையில் வழிகாட்டின.
சில வருடங்கள் கஷ்டப்பட்டு ஓரளவிற்கு வயல் வரப்புகளைப் பாதுகாத்து வைத்திருந்த போது ஓடிப்போன அண்ணன்கள் திரும்பி வந்தனர். திருடின நகைகள் விற்று –தீர்ந்திருக்க வேண்டும்.
மறுபடியும் பிரச்சனை. பொறுப்பில்லாமல் நடந்து கொண்டோம் –வீட்டில் திருடினோம் – ஓடிப்போனோம் என்கிற வருத்தமோ –கூச்ச நாச்சமோ கொஞ்சமும் அவர்களிடமில்லை, தங்களின் தவறுகளை மறைக்க வேண்டித் தகராறு பண்ணக் கிளம்பினர்.
இந்த முறை அடித்துக் கொண்டு போக பணமோ, தானியமோ, நகைகளோ கிடைக்காத போது தங்களின் பங்கைப் பிரித்துத் தரும்படி சண்டைபிடித்தனர். மறுபடியும் மண்டைக் காய்ச்சல்! சம்மதிக்கா விட்டால் வெளியே அசிங்கமாகும். பசி –பட்டினி பரவாயில்லை –தாங்கிக் கொள்ளலாம். மானம் போகும்,ஊர் கேலி பேசும்.
வேறு வழியில்லாமல் இருந்த பவுன்களைச் சகோதரர்களுக்குப் பிரித்து கொடுத்து நிலங்களைப் பிரித்து எழுதினர். ஆனால் அவர்கள், தங்கள் பங்கில் பாடுபடாமல் வெளி நபருக்கு விற்றுவிட்டுக் கிளம்பினர்.
அது சீனிவாசனுக்கு மேலும் வருத்தம் தந்தது. என்ன உடன் பிறப்புகள் இவர்கள்! நம்மை வாழவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே என நோகடித்தது. ஆனாலும்கூட இவர் மனம் தளரவில்லை.
அப்போது அவருக்கு 14 வயது,
கொஞ்சம் வெளி அனுபவத்தில் துணிவு கொஞ்சம் வந்திருந்தது. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை! தொடர்ந்து செயல்படு எனும் உந்துதல்!
நாம் தப்புச் செய்யாத போது –நேர்மையாய் நடக்கும்போது எதற்காகக் கலங்கணும்? எதற்காகப் பயப்படணும் என்று சமயோகிதம் அறிந்து பயிரிட ஆரம்பித்தார். வெங்காயம், மிளகாய்,நிலக்கடலை என நன்றாகச் சாகுபடியாயிறு. மெல்ல மெல்லப் பணம் சேர்த்து அண்ணன்கள் விற்ற –தங்கள் பூர்வீக நிலங்களைத் திரும்ப வாங்கினார்.
அது இவரது வாழ்வின் முதல் சாதனை. அது –முயன்றால் முடியாததில்லை –இங்கு எதையும் பெறலாம் –என்கிற மனபலத்தைத் தந்தது. மனம் பலப்படும்போது இயல்பாகவே உடலும் பலப்படுகிறது.
என்னதான் நிலங்கள் இருந்தாலும், விவசாயம் செய்தாலும் கூட மழை -காற்று –வெள்ளம் –வறட்சி –என இயற்கையின் முரண்பாடுகளால் போதுமான அளவில் பலன் கிடைக்காமல் போகும் நிலைமை.
உடன்,மனது வேறு வழிகளிலும் சிந்திக்க ஆரம்பித்தது.
(3)
அந்த நாட்களில் அதாவது 1958 வாக்கில் –கிராமங்களில் மின்சாரம் கிடையாது. பாசனத்திற்குப் பம்பு செட்டுகள் இல்லை. அப்போது நீர்ப் பாசனத்திற்கு -மாடு கட்டி –தாம்புக் கயிறு –சாலில் தும்பி கட்டித்தான் இறைப்பார்கள்.
தினமும் இரவு பகலாய்த் தண்ணீர் இறைக்க வேண்டி இருக்கும், இல்லாவிட்டால் பயிர் காய்ந்து விடும். அந்த மாதிரி இறைக்கும் போது ஒரு சமயம் தும்பி கிழிந்துவிட –அண்ணனுக்கு மகாகோபம்.
``பொறுப்பிருக்கா உனக்கு ....? ஏன் தும்பியைக் கிழித்தாய்...? என்று சீனிவாசனைப் போட்டு அடித்துவிட்டார். அது இவரை ரொம்பவே நோகடித்தது.
``எனக்கா பொறுப்பில்லை! ராத்திரி பகலாய் உழைக்கிறேன் வெயிலும் மழையிலும் அவஸ்தைப்படுகிறேன். உணவு –உடை –பொழுதுபோக்கு –சொகுசு என்று எல்லாம் துறந்து –மறந்து பாடுபடுகிறேன்.
தும்பி பழசாகிக் கிழிந்துவிட்டால் அதுக்கு நானா பொறுப்பு! ஊர் சுற்றியான அண்ணன் எப்படி என்னை அடிக்கலாம்? உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைக்கும் பரிசு இதுதானா?
என்னை அடிக்க அல்லது தண்டிக்க அண்ணனுக்கு என்ன தகுதியிருக்கிறது? கட்டபொம்மன் பாணியில் ...! உழுதாயா... நாற்று நட்டாயா –களை பறித்தாயா –நீர் இறைத்தாயா ..வியர்வை சிந்தினாயா ..அடிக்க மட்டும் வந்து விட்டாயே .. நீ யார் என்னைத் தண்டிக்க..’ என்று மனது ஆவேசப்பட்டது.
வயதில் மூத்தவன் என்கிறதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமா?
ஆனாலும் கூட அண்ணன் எதிர்க்கும் -சண்டை பிடிக்கும் தைர்யம் வரவில்லை. முடியவில்லை. விரக்தி, வெறுப்பு, போதும்டா சாமி, இங்கே ஊரில் என்ன செய்தாலும் முன்னுக்கு வர முடியாது என்று தீர்மானித்தார்.
ஊரில் ஒப்பேற்ற முடியாதவர்கள்! பட்டணத்திற்கு ஓடிப் போவது அந்த நாளில் வாடிக்கை! அந்த மாதிரி ஓடிப் போன சிநேகிதர்களின் யோசனைப்படி சீனிவாசனும் ஓட்டம்!
வேறு எது பற்றியும் சிந்திக்கவில்லை.எங்கு –எத்தனை கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. இவர்களுக்கு முன்னில் வளர்ந்து காட்டணும் என்கிற வைராக்கியம். கஷ்டம் தனக்குப் புதிதல்ல.கல் –முள் –வெயில் –மழை ஒரு பொருட்டல்ல. எல்லாம் பார்த்தாயிற்று. பாரம் சுமந்தாயிற்று. இதற்கு மேல் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?.
முன்னேறும் ...
Subscribe to:
Posts (Atom)