பத்துப் பாட்டுக்களில் ஆறாவது
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார்
பாடிய
மதுரைக் காஞ்சி
இயற்கை வளம்
ஓங்குதிரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக,
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப, 5
வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்,
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்க, 10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த,
செயற்கைச் செழிப்பு நிலை
நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக, மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு 15
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து,
உண்டு தண்டா மிகு வளத்தான்,
உயர் பூரிம விழுத் தெருவில்,
பொய் அறியா, வாய்மொழியால்
புகழ் நிறைந்த, நல் மாந்தரொடு 20
நல் ஊழி அடிப் படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!
அகத்தியரின் வழிவந்த சான்றோன்
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர் 25
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சு வந்த போர்க்களத்தான்,
ஆண் தலை அணங்கு அடுப்பின்,
வய வேந்தர் ஒண் குருதி 30
சினத் தீயின் பெயர்பு பொங்க,
தெறல் அருங் கடுந் துப்பின்,
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்,
தொடித் தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு, 35
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின் 40
தொள் முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்
நால் வகைப் படைகளின் வலிமை
விழுச் சூழிய, விளங்கு ஓடைய,
கடுஞ் சினத்த, கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய, 45
வரை மருளும் உயர் தோன்றல,
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும் 50
வாம் பரிய கடுந் திண் தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்